காலத்தின் நெற்றியில் சிலவரிகளை எழுதுகிறேன்; அழிக்கிறேன்.
ஒரு புதிய பாடலைப் பாடுகிறேன்.
- வாஜ்பாயி
நாட்டின் 13வது பிரதமராக அவர் 1996 - ல் பதவியேற்றபோது எல்லோருக்கும் தெரியும், இவர் சில நாட்கள்தான் பிரதமராக நீடிக்கமுடியும் என்பது. ஏனெனில் அவரது கட்சி 161 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. தனிப்பெரும்பான்மைக்கான பலம் இல்லை. அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைத்திருந்தார். காங்கிரஸுக்கு மாற்றுக் கட்சியாக அது வளர்ந்துவிட்டது என்பதை இந்த வெற்றி உலகுக்கு அறிவித்தது மட்டும்தான் பெற்ற பலன். அதே காங்கிரஸில் பிரதமராக இருந்த நேரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனிதர் ஒரு நாள் நாட்டின் பிரதமர் ஆவார் என்று ஆரூடம் கூறியது பலித்தது. ஆம். வாஜ்பாயி 1996 - ல் பிரதமர் ஆனார். அன்றைக்கு இந்திய அரசியலில் பாஜக தீண்டத்தகாத கட்சியாக இருந்ததால் வேறு எந்த கட்சியும் ஆதரவு தர முன்வரவில்லை.
ஆனால் இந்த 13 நாட்களை வாஜ்பாயி சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் ஆட்சி மீதான வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நடந்தபோது மக்களவையில் ராஜினாமா செய்வதற்கு முன்பாக ஓர் உரை ஆற்றினார். அது தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. இம்மாதிரி நேரடி ஒளிபரப்பு இதுதான் முதல்முறை. காங்கிரஸ், தேசிய முன்னணி, இடதுசாரிகள் ஆகியோர் பாஜகவால் மதச் சார்பின்மைக்கு ஆபத்து என்று கூறியபோது, அதை முறியடிக்கும் விதத்தில் அந்த உரையை வாஜ்பாயி பயன்படுத்திக்கொண்டார். தன் ராஜினாமாவை குடியரசுத்தலைவரிடம் கொடுக்கச் செல்லும்போது,
''நாங்கள் திரும்பவும் வருவோம். சக்கரவியூகத்துக்குள் செல்வது எப்படி என்று எங்களுக்குத் தெரியும்; அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்றும் தெரியும்'' என்று தனக்கே உரிய பாணியின் சவால் விட்டார். தோற்றாலும் ஆட்டத்தை நீண்டகாலம் ஆடத்தயார் என்பது அவரது வியூகமாக இருந்தது. அன்று அவருடன் கூட்டணியில் இருந்தது சிவசேனா, அகாலி தளம் மட்டுமே. மொத்தம் 181 இடங்களே.
அனந்தசயனம் அய்யங்கார் 1957 -ல் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர். அவர் தன் அவையில் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய உறுப்பினர் என்று இடதுசாரி உறுப்பினர் ஹிரென் முகர்ஜி பெயரைச் சொல்லி இருக்கிறார். கூடவே இந்தியில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய ஒருவர் இருக்கிறார். அவர் சபைக்குப் புதியவர், அவர் பெயர் அடல்பிஹாரி வாஜ்பாயி என்று சொல்லி இருக்கிறார். அப்போது அவர் ஜனசங்க உறுப்பினர். ஜனசங்கம் 1951 -ல் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாகவே அது தோன்றியது. அந்தக் கட்சி காங்கிரஸின் வலிமைக்கு முன்னால் வளர்ச்சி அடைய முடியவில்லை. அதன் உச்சகட்ட அரசியல் வலிமை என்பது 1977 -ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் அழைப்பின்பேரில் ஜனதா கட்சி என்ற கட்சி நீரோட்டத்தில் இணைந்து பெற்றதுதான். அதன் உறுப்பினர்கள் பலர் அதிகாரத்துக்கு வந்தனர். வாஜ்பாயி அதில் வெளியுறவுத்துறை அமைச்சர். ஐ.நா. சபையில் முதன் முதலில் இந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார். ஆனால் அந்த ஜனதா கட்சி ஆட்சி
நீடிக்கவில்லை. 1980 - ல் மீண்டும் இந்திரா ஆட்சியைப் பிடித்துவிட்டார். ஜனதாவின் தோல்விக்குப் பின்னர் அக்கட்சியில் இருந்து ஜனசங்க உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். மீண்டும் இணைந்து பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சியை உருவாக்கினர். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 1980 ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி உருவானது. அதன் முதல் தலைவராக பதவி ஏற்றார் அடல் பிகாரி வாஜ்பாயி.
ஜனசங்கம் போலவே இக்கட்சியும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸால் இயக்கப்படுமா என்பது இதற்கு அர்த்தம். தன் தலைமை உரையில் இதை உடைத்தார் வாஜ்பாயி: '' நாங்கள் ஜனசங்கம் போல எங்களைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஜனதா கட்சியில் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்துவோம்,'' என்றார் வாஜ்பாயி. இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்து தீவிரவாதத்திலிருந்து தன்னை விலகிய முகமாகக் கட்டமைத்தார். இதுதான் அவரை அடுத்த இருபது ஆண்டுகளில் பிரதமர் பதவிக்குக் கொண்டு சென்றது.
இதைத் தொடர்ந்து 1984 - ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் வந்த பொதுத்தேர்தலில் பாஜக பெற்றது இரண்டே இரண்டு இடங்கள்தான். குவாலியரில் போட்டியிட்ட அவர் தோல்வியையே அடைந்தார். இந்திரா படுகொலையைத் தொடர்ந்து வீசிய அனுதாப அலையில் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
இரண்டே இரண்டு இடங்களை வென்ற கட்சிதான் பாஜக என்பதில் இங்கு பலருக்கும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இன்றைக்கு 303 இடங்களை மோடி தலைமையில் பாஜக வென்றிருப்பதற்கான விதை அந்த இரு இடங்களில் போடப்பட்டது.
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அடுத்த தேர்தல் 1989 - ல் வந்தபோது வி.பி.சிங் பிரதமர் ஆனார். அப்போது அவருக்கு ஆதரவளித்த பாஜக 86 இடங்களில் வென்றிருந்தது. இரண்டு இடங்களில் இருந்து 86 இடங்களாக ஐந்து ஆண்டுகளில் உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்த தேர்தல் 91 - ல் வந்தது. இடையில் சந்திரசேகர் அரசு ஆறு மாதங்கள் அமைந்திருந்தது. இம்முறை பாஜக அதிக இடங்களை வென்றிருக்கமுடியும். ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலை குறுக்கே வந்தது. 120 இடங்கள்தான் கிடைத்தன.
முன்னதாக அத்வானியின் ரதயாத்திரை அயோத்திப் பிரச்னையை மையப்படுத்தி அமைந்திருந்தது. இது இந்து வாக்குகளின் வளர்ச்சிக்கு வழிகோலியது. இச்சமயங்களில் வாஜ்பாயி எப்போதும்போல் பாஜகவில் தன்னை மிதவாதியாகவே வைத்திருந்தார். அத்வானி தீவிர இந்துத்துவவாதியாக கருதப்பட்டபோது, வாஜ்பாயியின் இந்த முகம் பாஜகவுக்குத் தேவைப்பட்டது. அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டபோது அந்த மேடையில் வாஜ்பாயி இல்லை என்பது தற்செயலா என்று தெரியவில்லை.
நரசிம்மராவ் ஆட்சி ஐந்தாண்டுகள் நீடித்தது. ராவ், வலதுசாரிகளுக்கு உகந்தவராகவே இருந்தார். ஜெனிவாவில் நடந்த ஐநா சபைக் கூட்டத்தில் பாகிஸ்தானின் காஷ்மீர் நடவடிக்கைகளை முறியடிக்க எதிர்க்கட்சித்தலைவரான வாஜ்பாயியையே ராவ் அனுப்பி வைத்தார். 1994 -ல் அவருடைய 'எனது ஐம்பத்தியொரு கவிதைகள்' என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபோது பிரதமர் நரசிம்மராவ் தலைமை விருந்தினராக வந்திருந்தது ஆச்சரியத்தை அளித்திருந்தது.
மிகச்சிறந்த பேச்சாளராகவும் கலாரசிகராகவும் விளங்கிய வாஜ்பாயி கட்சியைத் தாண்டி நண்பர்களைப் பெற்றிருந்தார். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுடன் அவர் பேணிய நட்புக்கு ஓர் உதாரணம், அன்று மதுரையில் ஈழப்பிரச்னைக்காக டெசோ மாநாட்டை திமுக நடத்தியபோது அதில் வாஜ்பாயி அழைக்கப்பட்டு கலந்துகொண்டிருந்தார். முப்பது ஆண்டுகள் நாடாளுமன்ற அனுபவத்தில் வாஜ்பாயி ஒரு 'ஸ்டேட்ஸ்மேன்' என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார்.
இதை நன்கு புரிந்து வைத்திருந்தார் அத்வானி. 1995 - ல் பாஜக தலைவராக இருந்த அத்வானி அந்த முக்கிய அறிவிப்பை மும்பையில் நடந்த கட்சி மாநாட்டில் வெளியிட்டார். ''அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வாஜ்பாயி பிரதமராக அமர்வார்.'' மேடையில் அமர்ந்திருந்த வாஜ்பாயியிடம் இதைப் பற்றி முன்கூட்டியே தான் ஆலோசிக்கவில்லை என்று அத்வானி தன் சுயசரிதையில் குறிப்பிடுகின்றார். இந்த அறிவிப்பைக் கேட்ட வாஜ்பாயி, மைக்கை வாங்கி, 'முதலில் நீங்கள்தான் பிரதமர் ஆகவேண்டும்' என்று சொல்ல, அத்வானி மறுத்து, 'நீங்கள் தான் ஆகவேண்டும்' என்கிறார். கிட்டத்தட்ட இதுவொரு விருந்தோம்பல் நிகழ்ச்சிபோல் அமைந்திருக்கிறது. அத்வானியா வாஜ்பாயியா என்ற போட்டியில் வாஜ்பாயிதான் என்று முடிவு செய்யவேண்டி வந்ததற்குக் காரணம் அப்போது நிலவிய கூட்டணிக் கட்சிகளின் அரசியல் சூழல்தான். பாஜகவை பிற கட்சிகள் கூட்டணியில் சேர்க்கத் தயங்கிய நிலையில் எல்லோருக்குமான இணக்கமான ஒரு முகமாக வாஜ்பாயியை முன்னிறுத்த பாஜக விரும்பியது. அதுவரை பிரதமர் வேட்பாளர் என்று தேர்தலுக்கு முன்பாக யாரையும் அறிவிப்பது இந்தியாவில் பழக்கம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் காந்தி - நேரு குடும்பத்தினர்தான் பிரதமர் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.
அத்துடன் பின்வந்த இரு தேர்தல்களிலும் அத்வானி அவருக்குப் போட்டியாக வந்திருக்கக் கூடும். ஆனால் ராவ் அரசு அவர் மீது ஹவாலா வழக்குத் தொடர்ந்துவிட்டது. இந்த வழக்கில் இருந்து விடுபடும் வரைக்கும் அவர் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தும் விட்டார்.
இப்போது பாஜகவுக்கு ஒன்று புரிந்தது. இன்னும் சிலகாலத்துக்கு தனித்து நின்று ஆட்சியைப் பெறும் அளவுக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற இயலாது. கூட்டணி ஆட்சி அமைப்பதே ஒரே வழி. அதற்கு மிதவாத முகமான வாஜ்பாயியின் முகமே உதவும். ஆனால் நிச்சயமாக இது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்குப் பிரியமான வியூகமாக அமையவில்லை. பாஜகவில் பொதுச்செயலாளராக இருந்த கோவிந்தாச்சார்யா,''வாஜ்பாயி பாஜகவின் உள்வலிமையைப் பிரதிபலிக்கவில்லை. அவர் ஒரு முகமூடி மட்டுமே'' என்றார். இந்த செய்தி வெளிவரும்போது வாஜ்பாயி பல்கேரியாவில் இருந்தார். திரும்பியதும் அவர் இதை இலேசாக எடுத்துக்கொள்ளவில்லை. கட்சித் தலைவர் அத்வானிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்: அதில் இருந்தது இதுதான்: '' நாடு திரும்பியதும் கோவிந்தாச்சார்யா பேட்டியைப் படித்தேன். நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள். விஜயதசமி வாழ்த்துகள்.'' அடுத்த கடிதம் கோவிந்தாச்சார்யாவுக்கு விளக்கம் கேட்டு அனுப்பினார். இரு நாள் கழித்து பாஜக இளைஞர் மாநாட்டில், '' கட்சி பிரதமரை உருவாக்குவதில்லை. மக்கள்தான் உருவாக்குகிறார்கள்'' என்றார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு அவர் அளித்த மறைமுக செய்தி இது. எல்லோரும் விளங்கிக்கொண்டனர். அச்சமயம் வெளியான பல கருத்துக்கணிப்புகள் மக்களிடையே வாஜ்பாயியின் செல்வாக்கு பாஜகவின் செல்வாக்கை விட அதிகமாக இருந்ததாகக் காட்டின. ஆனாலும் தீவிர இந்துத்துவம் பேசும் தலைவரான பெண் சாமியார் ரிதம்பரா, வாஜ்பாயியை ' பாதி - காங்கிரஸ்காரர்' என்று வெளிப்படையாக சாடினார். அப்போதைய வி.ஹெச்பி தலைவர் அசோக் சிங்காலுடன் பேச்சுவார்த்தையே வாஜ்பாயிக்கு இல்லாமல் போய்விட்டது.
இதை மாற்றுக்கொள்கை கொண்ட தலைவர்களும் கவனிக்கத்தவறவில்லை. 'ரைட் மேன் இன் தி ராங்க் பார்ட்டி' என்று கலைஞர் கருணாநிதி வாஜ்பாயியைப் பற்றிக்கூறியது ஞாபகம் இருக்கலாம். (பின்னாளில் 1999 -ல் இருந்து 2004 வரை திமுக பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது, முரசொலி மாறன் அமைச்சர். அவருக்கு உடல்நலம் குன்றி பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவரை துறை இல்லாத அமைச்சராகவே அவர் மருத்துவமனையில் மரணம் அடையும்வரை
நீடிக்கச் செய்தார் வாஜ்பாயி. அவர் இறந்தபோது
சென்னை வந்து மரியாதை செய்யவும் தவறவில்லை.)
முதலில் தேவேகவுடா, பிறகு குஜ்ரால் இருவரும் பிரதமராக இருந்த கூட்டணிக் கட்சிகளின் ஆட்சிக்காலம் இரண்டாண்டுகள் நீடித்து 1998 - ல் மீண்டும் தேர்தல் வந்தது. பாஜக 181 இடங்களில் வென்றது. வலிமையான பிரதமர், வளர்ச்சி மிகுந்த பாரதம் என்று வாஜ்பாயியை முன்னிலைப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்தது. சுகாதாரம்,கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாஜ்பாயி பிரச்சாரம் செய்தார். ராமர் கோயில்கட்டுவது, இந்து ராஷ்டிரம் அமைப்பது குறித்த கேள்விகள் தனக்கு எரிச்சலூட்டுவதாக அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
இம்முறை தேசிய ஜனநாயகக்கூட்டணி உருவாயிற்று. இதற்காக குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, அனைவருக்கும் பொது சிவில் சட்டம், 370&வது
சட்டப்பிரிவை காஷ்மீருக்கு நீக்குவது ஆகிய முக்கிய விஷயங்களை விலக்கிக்கொள்ள பாஜக சம்மதிக்க, பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் ஆதரவு தர சம்மதித்தன. அதில் அதிமுகவும் ஒன்று. இந்த குறைந்த பட்ச செயல்திட்டம் பாஜகவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான விட்டுக்
கொடுத்தல். அதிகாரத்தை நோக்கிய நகர்தலின் முதல்படி.
1998 - ல் வாஜ்பாயி பிரதமர் ஆனார். அத்வானி உள்துறை அமைச்சர் ஆனார். இந்த ஆட்சி 13 மாதங்கள் நீடித்தது. இச்சமயத்தில் பொக்ரான் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார் வாஜ்பாயி. ஜெயலலிதா ஒரு கட்டத்தில் தன் ஆதரவை விலக்க ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. ஜெயலலிதாவை வாஜ்பாயி சமாளித்த கதைகளை எழுதினால் இங்கே பக்கம் போதாது. கார்கில் போரை காபந்து பிரதமராக இருந்து சமாளித்த நிலையில் மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக இடத்தில் திமுக வந்திருந்தது! காங்கிரஸ் தலைமையை சோனியா காந்தி ஏற்றிருந்தார். இம்முறையும் தே.ஜ.கூட்டணி வென்று வாஜ்பாயி ஐந்தாண்டுகள் தாக்குப் பிடித்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஐந்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் முதன்முதலில் இருந்த நிகழ்வை நடத்திக்காட்டியவர் வாஜ்பாயி.
செப்டெம்பர், 2019.